திருப்பதி அருகே கித்தலுரு வனப்பகுதியில் பைக்குடன் 26 செம்மரக் கட்டைகள் பறிமுதல்
*3 பேர் கைது
திருமலை : திருப்பதி அருகே கித்தலுரு வனப்பகுதியில் பைக்குடன் 26 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்தனர்.திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.டி. ஷெரீப், ஆர்எஸ்ஐ பி. நரேஷ் குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு முதல் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கித்தலுரு வனப்பகுதியின் பெஸ்டாவரிபேட்டை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது குந்தப்பள்ளி சரக எல்லையை அடைந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்டனர்.
அவர்களை ேநாக்கி போலீசார் சென்றபோது, அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர். இருப்பினும், அவர்களைத் துரத்திச் சென்ற அதிரடிப் படையினர் அவர்களில் மூன்று பேரை பிடித்தனர். அவர்களை விசாரித்த பிறகு, அங்கு கல்வெர்ட்டின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. டிஎஸ்பி ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஏசிஎப் ஸ்ரீனிவாஸ் மூவரையும் விசாரித்த பிறகு தலைமை காவலர் சுப்பிரமணியம் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.