திருப்பதி மலைப்பாதையில் ஆக.15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஆந்திரா: திருப்பதி மலைப்பாதையில் ஆகஸ்ட் .15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களுக்கு உடமைகள் சோதனை செய்த பிறகு சாலையில் செல்வதற்கான சுங்கக்கட்டணம் செலுத்திய பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சமீப நாட்களாக கூட்ட நேரிசல் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பக்தர்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஃபாஸ்டேக் இருந்தால் மட்டுமே கட்டாயமாக அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதே நேரத்தில் ஃபாஸ்டேக் வழங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்கள் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் உள்ள பிறகே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.