திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. மேலும் ஆழ்வார் தோட்ட பூங்கா, நாராயணகிரி பூங்கா வரிசைகள் அனைத்தும் நிரம்பி சிலாதோரணம் வரை 2 கி.மீ. தூரம் கொட்டும் சாரல் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நேற்று காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதிய அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், திருமலையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அன்னப்பிரசாத சிறப்பு கவுண்டர்களிலும் தொடர்ந்து பக்தர்களுக்கு பால், அன்ன பிரசாதம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.