திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவைக்கு பிறகு சிறப்பு நைவேத்தியம் சமர்பிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள மணி மண்டபத்தில் கருட ஆழ்வார் சன்னதி அருகே உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினார்.
அவருக்கு எதிராக சேனாதிபதி விஸ்வசேனர் காட்சிகொடுத்தார். அப்போது கோயில் ஜீயர்கள் முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. இதையொட்டி ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், ரத்து செய்யப்பட்டது. இதில் துணை செயல் அதிகாரி லோகநாதம், திருப்பதி எஸ்பி சுப்பாராயுடு, முதன்மை பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள புண்டரிகவல்லி தாயார் கோயிலில் இருந்து புதுவஸ்திரம் மற்றும் தீபங்கள் ஜீயர்கள் முன்னிலையில் கொண்டு சென்று சுவாமிக்கு சமர்ப்பித்து பின்னர் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.
18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி நாளான நேற்று முன்தினம் 72 ஆயரத்து 026 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை காத்திருந்தனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.