திருப்பதியில் 4ம் நாள் பிரம்மோற்சவம் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு முதல் சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி நடைபெற்றது. 3ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். இரவு உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி முத்துபந்தல் வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருபாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். சொர்க்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது கற்பக விருட்சம். அது போன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டும், கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி வீதிஉலாவில் கர்நாடக, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், கிருஷ்ணர், மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரத்தை விளக்கும் வகையில் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனர்.
இன்றிரவு உற்சவத்தில் உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்க்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* நாளை கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு நடைபெற உள்ளது. மலையப்பசுவாமி தங்க கருட வாகனத்தில் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். கருட சேவையை காண இன்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் கருட சேவையை தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 6000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4000 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமலை, திருப்பதி மலைப்பாதை சாலையில் மற்றும் நடைபாதைகளில் சிறப்பு பாதுகாப்புப் படையினருடன் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருச்சக்கர வாகனம், டாக்சி வாகனங்களுக்கு இன்று மாலையில் இருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.