திருப்பதி உண்டியல் காணிக்கை மோசடி வழக்கை கண்டறிந்த விஜிலென்ஸ் அதிகாரி மர்ம மணம்: ஓடும் ரயிலில் இருந்து பொம்மையை வீசி போலீசார் விசாரணை
திருப்பதி: திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மோசடியை கண்டறிந்த விஜிலன்ஸ் அதிகாரி சதீஸ்குமாரின் மர்ம மரணம் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து அவர் தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து பொம்மை ஒன்றை தள்ளி போலீசார் குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணத்தை திருடிய வழக்கில் எழுத்தர் சி.வி. ரவிக்குமாரை அப்போதிருந்த விஜிலன்ஸ் அதிகாரியான சதீஸ்குமார் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இவர் தற்போது தாடிபத்ரி ரயில்வே காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருந்த நிலையில், இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்திவருகிறது. கூடுதல் டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராக சதீஸ்குமார் தாடிபத்ரி- திருப்பதி ரயிலில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புறப்பட்டார். மறுநாள் காலை தாடிபத்ரி- குத்தி மார்க்கத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சதீஸ்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது, தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றர்.
இந்த நிலையில் சதீஸ்குமார் இறந்த சம்பவத்தை மறுகாட்சி அமைக்கும் விதமாக ஓடும் ரயிலில் இருந்து பொம்மைகளை தூக்கிவீசி டிரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த காட்சிகளை வைத்து வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடைபெறும்.