திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
மதுரை : மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாக, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி இருந்தார்.
இதேபோல, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், "பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், 3வது நீதிபதிக்கு வழக்கு ஒதுக்கப்பட்டது.
அதன்படி, நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். அந்த தீர்ப்பில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படுகிறது. சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் நெல்லிதோப்பில் இஸ்லாமியர் வழிபாடு நடத்த தடையில்லை. மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.