நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி
நெல்லை: நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து 6 மாணவிகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வைரலான அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் சிலர் வட்டமாக தரையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் மதுபான பாட்டிலில் இருந்த மதுவை பிளாஸ்டிக் டம்ளர்களில் ஊற்றி, ஒருவருக்கொருவர் `சியர்ஸ்’ சொல்லிக்கொண்டு உற்சாகமாக அருந்தினர்.
மேலும், மதுவின் நெடி தாங்காமல் சிலர் முகம் சுளிப்பதும், அதை வீடியோவாக பதிவு செய்து மகிழ்வதும் அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குச்சென்றது. இதையடுத்து பள்ளி நிர்வாகம், வீடியோவில் இடம்பெற்றிருந்த மாணவிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 6 மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து விசாரித்தனர். அதில், மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதை கண்டிக்கும் வகையிலும், மற்ற மாணவிகளுக்கு எச்சரிக்கை செய்யவும் சம்பந்தப்பட்ட 6 மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
* பள்ளிக்குள் மது வந்தது எப்படி? போலீஸ் விசாரணை
மாணவிகள் மதுஅருந்தும் வீடியோ நெல்லை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேற்று முன்தினம் சென்றது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடத்திற்குள் மாணவிகள் மதுபானம் கொண்டு வந்தது எப்படி? என்பது குறித்தும், அவர்களுக்கு மதுபானம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.