திருநெல்வேலி - மைசூரு இடையிலான சிறப்பு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
நாகர்கோவில்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் 11 வாராந்திர சேவைகளில் சிறப்பு ரயிலை ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று மைசூரிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 11.30க்கு திருநெல்வேலி வந்தடையும். மறுமார்க்கத்தில், அதே ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 3.40க்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 5.40 க்கு மைசூர் போய் சேருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை ரயில்வேதுறை அறிவித்து இயக்கியது. அப்போது இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ரயில்வே துறை இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. தற்போது மீண்டும் திருநெல்வேலியில் இருந்து மைசூருக்கு தீபாவளி சிறப்பு ரயிலை அறிவித்திருப்பது குமரி மாவட்ட பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டால், பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.
கன்னியாகுமரி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களில் ஒன்றாக இருப்பதால், பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மைசூரு செல்வதற்கு இந்த வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் அதிகாலை பெங்களூரு செல்லுமாறு இயக்கப்படுவதால் குமரி மாவட்ட பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பெங்களூருக்கு இயக்கப்பட்டு வரும் தினசரி ரயிலின் கால அட்டவணை 9.30க்கு பெங்களூர் செல்லுமாறு உள்ளது. தீபாவளிக்கு விடுமுறைக்கு வருபவர்கள் திரும்பி செல்ல வசதியாக, சிறப்பு ரயிலை திருநெல்வேலியுடன் நிறுத்தாமல் கன்னியாகுமரி வரை நீட்டித்து, பயண கால அட்டவணையை திருத்தி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் இது போன்ற ரயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே உள்ளது. இதைப்போல் திருவனந்தபுரம் கோட்டம் மும்பையிலிருந்து கொங்கள் பாதையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தியுள்ளது. 2 மார்க்கங்களிலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், அருகருகே உள்ள மாவட்டத்துடன் நிறுத்தப்படுவது, குமரி மாவட்ட பயணிகளை வருத்தம் அடைய செய்துள்ளது என கூறி உள்ள குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர், குமரி மாவட்டம் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இல்லாத நிலை போல் உள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டம் ரயில்வே வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை கல் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. இதனால் திருநெல்வேலி - மைசூரு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்குவதற்கு எந்த ஒரு முனைய பிரச்சனையும் இல்லை. சிறிய அளவில் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்தால் எளிதாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க முடியும். இவ்வாறு கால அட்டவணை மாற்றம் செய்ய முடியாத பட்சத்தில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம்.
அதன்படி திருநெல்வேலிக்கு தற்போது வரும் 11.30 க்கு புறப்பட்டால் நாகர்கோவிலுக்கு 12.30 மணிக்கு வந்து விட முடியும். இவ்வாறு வந்த ரயில் 2:40 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி தற்போது மைசூர் புறப்படும் நேரமான 3.40 மணிக்கு சென்றுவிட முடியும். இந்த ரயிலுக்கு நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரியில் எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை. இந்த ரயிலுக்கான பராமரிப்பு மைசூர் ரயில் நிலையத்தில் வைத்து செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் இந்த ரயில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து அதிக வருவாய் கிடைத்தால் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.