திருமலையில் கனமழையால் பாபவிநாசனம் அணை நிரம்பியது
*கங்கா பூஜையில் அறங்காவலர் குழு தலைவர் பங்கேற்பு
திருமலை : திருமலையில் கனமழையால் நிரம்பிய பாபவிநாசனம் அணையில் நேற்று கங்கா பூஜை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் திருமலையில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று முழுவதும் நிரம்பிய பாபவிநாசனம் அணையில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு சிறப்பு பூஜைகள் செய்து கங்கா ஆரத்தி வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது:
திருமலையில் உள்ள அணைகள் அனைத்தும் 95 சதவீதம் நிரம்பியுள்ளது. பாபவிநாசனம் மற்றும் கோகர்பம் அணைகள் முழுமையாக நிரம்பியதால், மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு திருமலையில் ஒவ்வொரு நாளும் 50 லட்சம் கேலன் தண்ணீர் தேவைப்படும் நிலையில், திருப்பதியில் உள்ள கல்யாணி அணையிலிருந்து 25 லட்சம் கேலன் தண்ணீரும், திருமலையில் உள்ள அணைகளிலிருந்து 25 லட்சம் கேலன் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதுள்ள தண்ணீர் இருப்பு மூலம் திருமலையில் 250 நாட்கள் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்தலாம். அணைகளை தொடர்ந்து கண்காணித்து, நீர் தேவைகளை முறையாக நிர்வகித்து வரும் பொறியியல் துறைக்கு பாராட்டுக்கள்.
இதேபோல், தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கடந்த 11 மாதத்தில் ரூ.916 கோடி நன்கொடைகள் வழங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதில் தேவஸ்தான தலைமை பொறியாளர் சத்யநாராயணா, இ.இ.க்கள் சுப்பிரமணியம், ஸ்ரீநிவாச ராவ், சுதாகர், கோயில் துணை இ.ஓ.லோகநாதம், விஜிஓ சுரேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.