திருச்செந்தூரில் பயங்கரம் காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை: காதலியின் தம்பி உள்பட 3 பேருக்கு வலை
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலக்ட்ரீசியன். இவருக்கும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை, மகளை காணவில்லை என கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை வேலைக்காக பைக்கில் திருச்செந்தூர் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்ட முயன்றனர். இதைப்பார்த்த மணிகண்டன் உயிருக்கு பயந்து பைக்கை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் ஓடஓட விரட்டி மரக்கடைக்குள் புகுந்து மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், காதல் விவகாரத்தில் பெண்ணின் தம்பி உட்பட 3 பேர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.