திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவம் மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
*திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருமலை : திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று பத்மாவதி தாயார் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரமோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
இதேபோல் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. முதல்நாளில் நான்கு மாட வீதிகளில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2ம் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்ன வாகனத்திலும் அருள்பாலித்தார். 3ம் நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் தனலட்சுமி அலங்காரத்திலும், அன்றிரவு சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்தார். 5ம் நாளில் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கஜ வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, 6ம் நாளில் சர்வ பூபால வாகனத்திலும், மாலை தங்கத்தேரிலும் தாயார் பவனி நடைபெற்றது. முக்கிய வாகன சேவையான கருட சேவையும் நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டிகை உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்தும், ஏழுமலையானின் திருப்பாதத்துடன் தாயார் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7ம் நாளான நேற்று முன்தினம் காலை பத்மாவதி தாயார் ஏழு குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் யோக நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்தார். நேற்று இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று காலை மகா ரதத்தில் (தேரில்) நான்கு மாட வீதிகளில், பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்திற்கு மத்தியில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் பக்தர்களின் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அதேபோல் சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் கலைஞர்கள் வேடமணிந்து வீதியுலாவில் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அஷ்வ வாகனத்தில் (குதிரை வாகனம்) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திருமலை ஜீயர் சுவாமிகள், இ.ஓ. அனில் குமார் சிங்கால், ஜே.இ.ஓ. வி.வீர பிரம்மம், சி.வி.எஸ்.ஓ. கே.வி.முரளிகிருஷ்ணா, கோயிலின் துணை இ.ஓ. ஹரிந்திரநாத், கோயில் அர்ச்சகர்கள் பாபு சுவாமி, ஸ்ரீநிவாச சார்யுலு மற்றும் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதன்படி, பத்மாவதி தாயாரின் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமியான இன்று காலை 11.45 மணியளவில் மகர லக்னத்தில் பஞ்சமி தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட உள்ளனர். இதனையொட்டி கோயில் சுற்றி 120 கேமராக்கள், 9 டிரோன் கேமராக்கள் மூலம் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார் இணைந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் நெரிசலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படாமல் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என எஸ்பி எல். சுப்பாராயுடு கேட்டுக்கொண்டார்.