திமிரி அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
*வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை
கலவை : திமிரி அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.திமிரி உள் வட்டம் திமிரி அடுத்த வரகூர் கிராமத்தில் தருமகிரிமலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியில் இருந்து சிலர் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், கலெக்டரின் உத்தரவின் பேரில், திமிரி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் ஆற்காடு வட்ட சார் ஆய்வாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் திமிரி போலீசார் பாதுகாப்புடன் இடங்களை அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில், திமிரி சப் இன்ஸ்பெக்டர், குறுவட்ட நில அளவர், கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.