புலி வந்து விட்டது
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு இஷ்டம் போல் வரியை விதிக்கும் அமெரிக்கா, இந்தியாவுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க பயணத்தால், இந்தியா மீதான வரியை தள்ளி வைத்திருத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இறுதியாக இன்று முதல் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது. அமெரிக்க வர்த்தகத்தை நம்பி உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது பெரும் பாதிப்பு.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது உள்ள வரிகளோடு, கூடுதலாக 50 சதவீத வரியை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. புதிய வரிகள் ஆகஸ்ட் 27 அன்று நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி எந்தவித கவலையும் பிரதமர் மோடிக்கு இல்லை. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதைத் தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம் என்று கூறி கடந்து போய் இருக்கிறார் பிரதமர் மோடி.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் தமிழ்நாட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவின் மொத்தம் ரூ.38 லட்சம் கோடி பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 20 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ரூ.4.50 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் 31 சதவீத பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாக சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும். இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தி துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தின கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக ஜவுளித் தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
இதே வரி விதிப்பு தொடர்ந்தால், ஐரோப்பிய யூனியன் போன்ற மாற்று சந்தைகளை நோக்கி, இந்திய வர்த்தகர்கள் நகர வேண்டியிருக்குமென்று கூறும் ஏற்றுமதியாளர்கள், அதனால் உடனடியாக பலன் கிடைக்காது என்று அஞ்சுகின்றனர். அமெரிக்காவை மட்டுமே நம்பி, நவீன இயந்திரங்கள் மற்றும் புதிய கட்டமைப்பை உருவாக்கிய தொழில் நிறுவனங்களை இந்த வரி விதிப்பு கடுமையாக பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் வரி விதிப்பை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் சார்பில் பரிந்துரைகள் அனுப்பப்பட்டு விட்டன.
ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடியால் எடுக்கப்படவில்லை. ஒருவேளை சீனாவில் நடைபெறும் மாநாடு முடிந்த பிறகு ஒன்றிய அரசு சார்பில் அமெரிக்கா வரிவிதிப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். அதுவரை உள்ளூர் பொருட்கள் வாங்குவதையும், உள்ளூர் பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் கடை என்ற பேனர் வைப்பதையும் ஊக்குவித்து வருகிறார் பிரதமர் மோடி. அவர் பயன்படுத்தும் கண்ணாடி, பென், ஆடை மற்றும் அவர் பயணம் செய்யும் கார்கள் வரை அத்தனையும் வெளிநாட்டு இறக்குமதி. ஆனால் அவர் இப்போது சுதேசி பற்றி பாடம் எடுக்கத்தொடங்கியிருக்கிறார்.