தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியது. செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க, தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், சோதனை மையம், வடிவமைப்பு மையம், திறன் பயிற்சி வழங்கும் மையங்கள் உள்ளிட்டவை இதில் அமைகிறது.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்குடன் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு தொழில்நிறுவனங்களை அமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதுடன், பல லட்சம் பேரக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுசார்பில் ரூ.100 கோடியில் அமைய உள்ள செமி கண்டர்டர் ஆலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் நிறுவனமான டிட்கோ டெண்டர் கோரி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் செமிகண்டக்டர் மிஷன் 2030 திட்டத்தின் கீழ், ரூ.100 கோடி செலவில் சென்னையில் ஒரு செமிகண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த மையம் ஐஐடி மெட்ராஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையில் முன்னணி நிறுவனங்களின் ஆதரவுடன், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை உலகத்தரம் வாய்ந்த செமிகண்டக்டர் மையமாக உருவாக்குவது. இது இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் செயலாக்க வசதியுடன் கூடிய ஒரு பயிற்சித் திட்டமாகும்.
தமிழ்நாடு அரசின் ‘செமிகண்டக்டர் மிஷன் 2030’ திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் சூலூர் மற்றும் பல்லடத்தில் 100 ஏக்கரில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
செமிகண்டக்டர் துறையில் திறமை இடைவெளியைக் குறைத்து, புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.