ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஏர் இந்தியா பயணிகளுக்கு கட்டண சலுகைகள்: விமான நிறுவனம் அறிவிப்பு
அதன்படி, சாதாரண எக்கனாமி வகுப்பு இருக்கைகள், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 15 சதவீதமும், பிசினஸ் கிளாஸ் இருக்கைகளுக்கு 20 சதவீதமும், எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாசிஸ் பயணிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11.59 மணி வரையில், இந்த சலுகை தள்ளுபடி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளமான www.airindiaexpress.com மற்றும் செல்போன் செயலியில் உள் நுழைந்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கட்டண சலுகை தள்ளுபடியில் பெறும் விமான டிக்கெட்களை பயணிகள் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி விமானத்தில் பயணிக்கலாம்.
மேலும், பயணிகள் லக்கேஜ் எடுத்து செல்வதற்கும் தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் கிளாஸ், எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு, விமானத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்றும், எக்கனாமி சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சலுகை கட்டணத்தில் உணவு வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதனால் பெரும்பாலான பயணிகள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தங்களுடைய விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் கட்டண தள்ளுபடி, சலுகை கட்டணம், இலவச உணவு என்று அறிவிப்புகள் செய்து, பயணிகளை கவர்ந்து இழுக்கிறார்களா என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.