தூங்கா நகரை கைவிட்ட இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
இதில் ஆத்திரப்பட்ட சேலத்துக்காரர் இம்முறை துவக்கியுள்ள சுற்றுப்பயணத்தில் தூங்கா நகரம் கடுமையாக ‘கால் வாரி’ விடலாம் என்ற அச்சத்தில், இப்போதைக்கு 50 தொகுதிகளைத் தொட்டும் தன் பயணப்பட்டியலில் இந்நகரத்தை இதுவரையிலும் சேர்க்கவே இல்லை. நாளையிலிருந்து தூங்கா நகரத்து அருகாமை மாவட்டங்களான சிவகங்கை, ராம்நாடு துவங்கி, தூத்துக்குடி, நெல்லை முதல் விருதுநகர் வரை பயணிக்கிறவர், தூங்கா நகரத்தை கைவிட்டே ஊர் திரும்புகிறார்.
காரணம், தூங்கா நகரில் இலைக்கட்சிக்கான கூட்டம் சேர்ப்பது குதிரைக் கொம்பென இருப்பதால், ஜெயந்தி நாட்களில் ஊருக்கு வருகிற கூட்டத்தையும் சேர்த்து கணக்குக் காட்டும் நோக்கத்தில் அக்டோபரில் தூங்கா நகரை திட்டமிடும்படி சேலத்துக்காரருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறதாம். ‘எப்போ, எப்படி வந்தாலும் உள்ளூர் கூட்டம் ஒருபோதும் வராது, பழையபடி வண்டி அமர்த்தி வெளியூர்களில் ஆட்கள் பிடித்தே அழைக்க வேண்டி இருக்கும்’ என்று சக இலைக்கட்சிக்காரர்களே காதுபட பேசிக்கொள்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘‘ஷாக் அடிக்குற டிபார்ட்மெண்ட்டுக்கே ஷாக் அடிச்சிடுச்சுன்னு சொல்றாங்களே.. என்னா விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் அருகே இருக்குற ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவரு, புதுசா வீடு கட்டினாராம். அதுக்கு இபி கனெக்ஷன் வாங்குறதுக்கு விரிஞ்சிபுரம் இபி ஆபிஸ்ல அப்ளிகேஷன் போட்டிருக்காரு. வீட்டு பக்கத்துல கம்பம் நடுறதுக்கு 27கே ஆன்லைன் பேமெண்ட் செஞ்சாராம். ஆனா, எந்த கம்பமும் நடவே இல்லையாம். இபி ஆபிஸ்ல கேட்டா, அந்த ஆபிஸ்ல இருந்து ஒருத்தரு, 3கே சம்திங் கேட்டிருக்காரு. சம்திங் எதுக்கு கொடுக்கணும்னு நினைச்ச முதியவரு.
உடனே விஜிலென்ஸ்சுக்கு தகவலை சொல்லியிருக்காரு. ரசாயன நோட்டை தொட்டு பார்த்த இபி ஆபிஸ் போர்மேனுக்கு, ஷாக் அடிச்சிருக்குது. விஜிலென்ஸ் காக்கிகள் கையும் களவுமாக பிடிச்சிருக்காங்க. 3கேவுக்கு ஆசைப்பட்டு இப்ப கம்பி எண்ணிக்கிட்டு இருக்குறாராம் அந்த போர்மேன். இந்த ஏரியா மட்டுமில்லாம, இன்னும் வெயிலூர் மாவட்டத்துல பல ஏரியாக்கள்ல கனெக்ஷன் பிரச்னை இருக்குதாம். அதையும் ரெய்டு நடத்தி ஷாக் அடிக்குற டிபார்ட்மெண்டுக்கு ஷாக் கொடுக்கணும்னு ஜனங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காம லீலையில் ஈடுபட்ட காக்கி அதிகாரி இலை கட்சியில் இணைந்த பின்னணி என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கித் துறையில் காலூன்றி கோடிகளை குவித்தவர் நான்கெழுத்து பெயரை கொண்டவர். இலை கட்சி ஆட்சியில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த மாவட்டத்தில் செல்வாக்காக பணிபுரிந்தவர் அப்போதைய ஆட்சியில், டிஜிபியின் சொத்துகளையும் பாதுகாத்து, சேப்டிபடுத்தியதில் முக்கிய பங்காற்றினாராம். கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்றாராம்.
இவர் பணியாற்றிய காலத்தில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கடைசியில் தான் சார்ந்த துறையில் பெண் ஐபிஎஸ் குடும்பத்தில் லேடி விவகாரத்தில் சிக்கி வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானதாம். காம லீலைகள் பெயருக்கு போன நான்கு எழுத்து பெயரை கொண்ட அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அரசியல் கூடாரத்துக்குள் நுழைய பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தாராம்.
தாமரை கட்சிக்கு நூல் விட்டவர் கடைசியில் இலை கட்சியில் மாஜி அமைச்சர் முன்னிலையில் இணைந்துள்ளாராம். தன்னுடைய சொத்துகளையும், வழக்குகளையும் பாதுகாத்துக் கொள்ள இலை கட்சியில் இணைந்த அவர் வரவுள்ள தேர்தலிலும் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறதாம். இதனால் இலை கட்சியில் பெரும் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறதாம். கட்சிக்காக உழைத்த பலர் காத்திருக்க பல ஆண்டுகளாக காக்கி துறையில் கோடிகளை குவித்து கட்சியில் களமிறங்கிய அதிகாரி மீது இலை கட்சியில் அதிருப்தி கலககுரல்கள் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் இரட்டை நிலைப்பாட்டால் தொகுதிவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்ட மைய பகுதியில் ‘மினி டைடல் பார்க்’ அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தனது கோரிக்கையை ஏற்றுதான் ‘மினி டைடல் பார்க்’ அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது என்று மலராத கட்சியின் எம்.எல்.ஏ பெருமைப்பட்டார்.
கூடவே மாவட்ட தலைநகரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் டைடல் பார்க் அமைய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டைடல் நிறுவனம் சார்பில் தனக்கு 2 மாதம் முன்பு அனுப்பிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டு தனது முயற்சியின் பின்னணியை வெளிப்படுத்தினாராம். ஆனால் மலராத கட்சியின் இன்னொரு தரப்போ ‘யாரைக்கேட்டு இந்த இடத்தை தேர்வு செய்தீர்கள், இங்கே டைடல் பார்க் அமைக்க கூடாது’ என்று திடீர் கோஷம் எழுப்புகிறார்களாம்.
படித்த இளைஞர்களுக்காக இப்போதுதான் ஒரு தொழில் நிறுவனம் வருகிறது, அதற்குள் முட்டுக்கட்டையா, அப்போ வளர்ச்சி வளர்ச்சி என்பதெல்லாம் வெற்று கோஷம்தானா என மலராத கட்சியினரின் இரட்டை நிலைப்பாடு கண்டு தொகுதிவாசிகள் கேள்வி எழுப்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.