திருச்சூர் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது புகார்
திருவனந்தபுரம்: 2024 தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து முறைகேடு செய்ததாக ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் சுரேஷ் கோபி கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் கோபி போட்டியிட்ட திருச்சூர் தொகுதியில் வெளியூரைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் வாக்காளர்களாக சேர்ப்பு என்ற புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் வசிக்கும் சுரேஷ் கோபி பெயர், மக்களவை தேர்தலுக்கு முன் திருச்சூர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானது. பொய்யான ஆவணங்களை வழங்கி தனது பெயரை திருச்சூர் வாக்காளர் பட்டியலில் சுரேஷ் கோபி சேர்த்துள்ளதாக கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி டி.என்.பிரதாபன் திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருவனந்தபுரத்தில் வசிக்கும் சுரேஷ் கோபி, திருச்சூரில் நிரந்தரமாக வசிப்பதாக பொய் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். சுரேஷ் கோபி மட்டுமின்றி அவரது சகோதரர் பெயரும் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூரைச் சேர்ந்த பாஜகவினரை அழைத்து வந்து திருச்சூர் தொகுதியில் வாக்களிக்க வைத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் புகார் கூறியுள்ளது. கேரளாவின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 முதல் 60,000 வரை திருச்சூர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரசன்னா, தனது வீட்டு முகவரியில் 9 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தான் மட்டுமே வீட்டில் வசிக்கும் நிலையில் யார் என்றே தெரியாத 9 பேர் தனது வீட்டு முகவரியில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். எனவே, திருச்சூரில் நடந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
2019 முதல் 2024 வரை கேரளாவின் பிற மக்களவை தொகுதிகளில் சராசரியாக 80,000 வாக்குகள் அதிகரித்துள்ளன. மேலும், திருச்சூரில் மட்டும் 1.5 லட்சம் வாக்குகள் அதிகரித்திருப்பது எப்படி என கேரள முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடு மூலம் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றாரா என்றும் தாமஸ் ஐசக் கேள்வி எழுப்பினார்.