கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 3 பேர் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் 3 பேர், இன்று மயங்கி விழுந்த நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பள்ளியில் உள்ள ஆசிரியை, பள்ளி மாணவிகளை திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து பள்ளி மாணவிகள் 3 பேர் சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் உதவியோடு கஞ்சம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.