மீண்டும் மிரட்டல் விடுக்கும் டிரம்ப் மோடி அரசு மவுனம் சாதிப்பது ஏன்? காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடங்கியதிலிருந்து, சர்வதேச எதிர்ப்புகளை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவின் இந்தச் செயல், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்வது போல் உள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்வதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.
பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே சமீபத்தில் எவ்வித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தை கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்று முறை எழுப்பியுள்ளார். புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்பு இந்த எண்ணிக்கையை அவர் இன்னும் அதிகரிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
தனது நல்ல நண்பரான மோடியிடம் அவர் பேசியதாகவும், இறக்குமதியை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், அத்தகைய உரையாடல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. வெளியுறவுத்துறையின் இந்த மறுப்பை டிரம்ப் தெளிவாக நிராகரித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்திலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்திலும் டிரம்ப் பேசும்போதெல்லாம் பிரதமர் மோடி ‘மவுனி பாபா’ ஆகிவிடுகிறார் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு அஞ்சுகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.