தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்
*ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
கடையம் : கடையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயில், பழமை வாய்ந்த சிறப்பு பெற்றதாகும்.
இக்கோயிலில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்டதும், அங்கேயே வசித்து மூலிகை ஆராய்ச்சிகள் மேற்கொண்டதும் இக்கோயிலின் சிறப்பு.
இந்த ஆலயத்தில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், சஷ்டி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோயிலை சுற்றியுள்ள சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கிரிவலப் பாதை நடைபெறுகிறது.
நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு தோரணமலை முருகனை வழிபட்டனர். முன்னதாக உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழுத்திடவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.