தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் உலகத்தரத்தில் 2 கப்பல் கட்டும் தளம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை: தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு நாளுக்கு நாள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு மென்பொருள், மின் உற்பத்திகள், வாகன உற்பத்தி, அதன் உதிரி பொருட்கள் உற்பத்தி, தற்போது காலனி உற்பத்தியில் தமிழ்நாடு பெரிய அளவில் முன்னணியில் திகழ்கிறது. மற்ற மாநிலங்கள் உற்பத்தியில் 10% இருந்தன என்றால் தமிழ்நாடு 40 சதவீதம் என்ற பெரிய அளவிலான எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு, வெளிநாட்டு பயணங்களில் தமிழ்நாடு தனித்துவமான முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் செமி கண்டக்டர் உற்பத்தி கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை கொண்டுவரப்பட்டது. நீல பொருளாதாரத்தில் கடல் சார் உற்பத்தியில் பெரிய இலக்கு இருந்து வந்தது.
தற்பொழுது கூட பூம்புகாரில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து வரலாறு தொடங்குகிறது என்பதை முதலமைச்சரின் கூற்றை நிரூபிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துடன் கொச்சின் ஷிப் யார்டு லிமிடெட் மற்றும் மசாகோன் டாக் கடல் கட்டுமானம் லிமிடெட் என்ற இரு நிறுவனத்துடன் தலா ரூ.15,000 கோடி என ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன்மூலம் தமிழக இளைஞர்கள் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும். விரைவில் தூத்துக்குடியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. வெகு விரைவில் தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை வெளியிடப்பட உள்ளது. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தான பின், ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர்.
ஹெச்-1பி விசா குறித்து ஒரு அறிவிப்பை அமெரிக்க வெளியிட்டுள்ளது. இதுபோன்ற உலக அளவிலான சூழல்களை சிந்தித்து தான் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன்வாய்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதேபோல் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தேவைப்படும் மனித வளத்தை தயார்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
திருப்பூர் பின்னலாடை பிரச்னை குறித்து ஒன்றிய அரசுக்கு தெரிய படுத்திருக்கிறோம். நல்ல தீர்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கூடிய பெரிய முதலீட்டாளர்களால் தமிழ்நாட்டை தாண்டி சிந்திக்க முடியாது. தமிழ்நாட்டுக்கான போட்டி மற்ற மாநிலங்களுடன் அல்ல, மற்ற நாடுகளுடன் தான். இவ்வாறு அவர் கூறினார்.
* 4 ஆண்டில் ரூ.11,31,571 கோடி முதலீடு
‘கடந்த 4 ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் 1010க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.11,31,571 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 34 லட்சம் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் தொழில் துறையில் அரசியல் ஆக்க நினைப்பது சரியல்ல.
தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொறுப்புணர்வுடன் இந்த விவகாரத்தை அணுகவேண்டும். எந்த காலத்திலும், தவறான தகவலை கொடுத்ததில்லை. பரந்தூர் விமான நிலையம் சூப்பர் நிலையில் உள்ளது, நிச்சயம் நல்லபடியாக வரும்’ என்று டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
* விஜய்க்கு சூடான பதில்
வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என தவெக தலைவர் விஜய் நேற்று விமர்சனம் செய்து உள்ளார். கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.