அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு மாதம் ரூ.7,000 கோடி இழப்பு: ஏற்றுமதியாளர்கள், சுங்க முகவர்கள் கவலை
தூத்துக்குடி: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் மாதம்தோறும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் ஏற்றுமதியாளர்கள், சுங்க முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் 50% வரி விதிப்பால் விலை உயர்ந்து, அங்கே உள்ள வர்த்தகர்கள் இந்திய பொருட்களை வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகம் வழியாக அமெரிக்காவிற்கு மாதத்திற்கு 1000 முதல் 1500 கன்டெய்னர் வரை சென்று வந்தன. இந்த கன்டெய்னர்கள் மூலம் திருப்பூர், கரூர், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரக்கூடிய ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கான ஆடைகள் மற்றும் தூத்துக்குடியில் இருந்து தயாரிக்கப்படும் கடல் உணவுகள், முந்திரி பருப்பு மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான அரிசி மற்றும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பு காரணமாக இந்த வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.5,000 கோடி முதல் 7,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி தேக்க நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த பாதிப்பு காரணமாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள், சுங்க முகவர்கள், ஷிப்பிங் நிறுவன ஊழியர்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர், ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 40% அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே ஒன்றிய அரசு இந்தச் சூழ்நிலையில் இருந்து ஏற்றுமதியாளர்கள், சுங்க முகவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக தலையிட்டு ஒரு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி துறைமுக ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.