தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல்!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 02.04 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏ.டி.ஆர் ரக விமானம் புறப்பட்டது. இதில் 62 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என 67 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில் நடுவானில் சுமார் 1500 உயரத்தில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீர் என விமானம் முன்பக்க கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனையடுத்து விமானி அதிர்ச்சி அடைந்து விமானத்தை மேல பறப்பது ஆபத்து என உணர்ந்து, சென்னை கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரை இறங்குவதுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் வேகமாக விமானத்தை செலுத்திய பைலட் குறிப்பிட்ட நேரம் 3.35 மணிக்கு இறங்க வேண்டும். ஆனால் 8 நிமிடங்கள் முன்னதாக 3.27 மணிக்கு பத்திரமாக தரை இறக்கினர்.
இதனையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். மேலும் அந்த விமானத்தை பரிசோதித்த போது அந்த விமானம் அடுத்த பயணத்துக்கு தகுதியற்றது என்று தெரிவித்தனர். விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக ஏற்கனவே டி.ஜி.சி.ஏ. உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.