இந்தாண்டு பயிர்க்கடன் இலக்கு ரூ.20,000 கோடி: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
சென்னை: ‘சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2025’ கொண்டாடும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தேசிய வங்கியின் தமிழ்நாடு மண்டலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேலாக வியாபார பரிவர்த்தனை செய்து அகில இந்திய அளவில் முதலிடத்தில் வகித்தது. நடப்பு ஆண்டிலும் இதே முனைப்புடன் செயல்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
இந்த ஆண்டு பயிர்கடன் இலக்காக ரூ.20,000 கோடி தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக நபார்டு ரூ.3,730 கோடி (18.65%) அளவிற்கு வழங்கியுள்ளது. இதனை 50% அளவிற்கு உயர்த்தி வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயன்பெறும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கணினிமயமாக்கல் திட்டத்தில் 4532 சங்கங்கள் ரூ.180 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.