திருவெறும்பூரில் எல்கை பந்தயம் சீறிப்பாய்ந்து சென்ற 57 மாட்டு வண்டிகள்
*ரூ.1.57 லட்சம் பரிசு வழங்கப்பட்டது
திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம், பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.பெரிய மாடு பிரிவு போட்டியில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியானது நடராஜபுரத்திலிருந்து வேங்கூர், கல்லணை சாலை வழியாக 8 மைல் தூரம் சென்று வர வேண்டும். இந்த போட்டியில் முன்னாள் எம்எல்ஏ சேகரன் தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசு தஞ்சை மாவட்ட சிவந்தி நாதபுரத்தை சேர்ந்த மாடும், 2வது மற்றும் 4வது இடத்தை கிளியூர் மாடுகளும், மூன்றாவது இடத்தை தஞ்சை மாவட்டம் அம்மன் பேட்டை சேர்ந்த மாடுகளும் பெற்றது.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.10 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. 6 மைல் தூரம் நடைப்பெறும் சின்ன மாடு போட்டி பிரிவில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நடமாடு கங்காதரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் தேனி கேகே பட்டி பூதிபுரத்தைச் சேர்ந்த மாடுகள் முதல் இடத்தையும், புதுக்கோட்டை மணல்மேடுகுடி மஞ்ச கரை சேர்ந்த மாடுகள் 2வது இடத்தையும், தஞ்சை கொடி வயல் குறிஞ்சா கோட்டையை சேர்ந்த மாடுகள் 3வது இடத்தையும், புதுகோட்டை, பிடரி கார்டு சேர்ந்த மாடுகள் 4வது இடத்தை பெற்றது. இந்த போட்டியில் முறையே முதல்பரிசு ரூ.25 ஆயிரம், 2வது பரிசு ரூ.15 ஆயிரம், 3வது பரிசு ரூ.10 ஆயிரம் 4வது பரிசு ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்டது.
5 மைல் தூரத்திற்கு நடைபெறும் பூஞ்சிட்டு மாடு போட்டியில் 32 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. இதில் இரண்டு பிரிவுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் இடத்தை திருப்பந்துருத்தி மற்றும் குளித்தலை பகிர்ந்து கொண்டனர். இரண்டாவது இடத்தை கும்பகோணம் நிலையூர் மற்றும் திருப்பந்துருத்தியும் பகிர்ந்து கொண்டனர். மூன்றாவது பரிசை வெள்ளாம் பிரம்பூர் மற்றும் தஞ்சை காமாட்சி அம்மன் கோட்டை பகிர்த்து கொண்டனர். நான்காவது பரிசை விரகலும் மற்றும் ஒன்பத்து வேலியினரும் பெற்றனர்.
பரிசு தொகை முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் தங்கவேல், பேரூராட்சித் தலைவர் செல்வராஜ், மதிமுக நிர்வாகி திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.