திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் தள்ளுமுள்ளு: சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் திருவேற்காடு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள குடியிருப்புகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருவேற்காடு பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.