திருவண்ணாமலையில் பவுர்ணமி முன்னிட்டு கிரிவல பாதையில் வசிக்கும் சாமியார்களிடம் சோதனை: டிஎஸ்பிக்கள் தலைமையில் 50 போலீசார் கண்காணிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். அதன்படி இம்மாத பவுர்ணமி கிரிவலம் வரும் 8ம்தேதி நடைபெற உள்ளது. 8ம் தேதி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் இந்த மாதம் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் எஸ்பி சுதாகர், கோயில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் பேசுகையில், கிரிவல பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான வசதிகளை கோயிலில் மேற்கொள்ள வேண்டும்.
முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தரிசன வரிசையில் முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கவும், கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும் மாநகராட்சி சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். கோயில், கிரிவலப்பாதை போன்ற இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யவும், 108 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.மேலும், 9 இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில், பக்தர்களுக்கு தேவையான நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆட்டோக்கள் மற்றும் கியூஆர் கோடு இல்லாத ஆட்டோக்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார். இந்நிலையில் கிரிவல பாதையில் வசிக்கும் சாமியார்கள் சிலர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபடுவதுடன், பக்தர்களுக்கு இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் 2 டிஎஸ்பிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை கிரிவல பாதையில் தங்கியிருக்கும் சாமியார்களின் உடமைகளை சோதனையிட்டனர். கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் ஏதாவது பதுக்கி வைத்துள்ளார்களா என்று சோதனை செய்தனர். மேலும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, கிரிவலம் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என கூறினர்.
பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு
ஆடி மாத பவுர்ணமி வரும் 8ம்தேதி பகல் 2.43 மணிக்கு தொடங்கி, 9ம்தேதி பகல் 2.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, திருவண்ணாமலையில் இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.