திருவண்ணாமலையில் இன்று மாலை 1.30 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு அழைப்பு
சென்னை: திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு திருவண்ணாமலையில் இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு அழைப்பு விடுத்துள்ளார். திமுக வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு திருவண்ணாமலை கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இளைஞரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு: வணக்கம்! நன்றாக இருக்கிறீர்களா?.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(இன்று) திருவண்ணாமலை மாவட்டத்தில், இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறப் போவதாக தலைமைக் கழகம் அறிவித்தது, உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்ஞ் ஆனாலும், திமுகவின் தலைமைத் தொண்டன் என்ற முறையில், உங்களை முறையாக அழைக்க வேண்டும் என்று இந்த வீடியோவில் பேசுகிறேன்.
நம் எல்லோரையும் உடன்பிறப்புகள் என்று அழைக்க என்ன காரணம் தெரியுமா? எல்லோரது குடும்பத்திலும் அண்ணன்-தம்பி-அக்கா-தங்கை என்று இருப்பார்கள்; அதேபோல, நம் கழகத்திலும், எல்லோரும் அதே பாச உணர்வுடன் பழகவேண்டும் என்று தான் உடன்பிறப்பே என்று உறவு கொண்டாடுகிறோம்! அப்படிப்பட்ட நம்முடைய திமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கின்ற உதயநிதி, உங்கள் எல்லோரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று பாசறைப் பக்கம் தொடங்கி, சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த, “அறிவுத்திருவிழா” வரைக்கும் ஏராளமான முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறார்.
அதேபோல, கிரவுண்ட் வொர்க் செய்ய நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம் என்று உங்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதைப் பார்த்தபோது, 45 ஆண்டுகளுக்கு முன்பு 1980ல் நாங்கள் இளைஞரணி தொடங்கியபோது, எப்படி பெருமையாக இருந்ததோ, அதேபோல பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது. இளைஞர்களாக பொறுப்பிற்கு வந்திருக்கின்ற உங்களுக்கு “திராவிடம்” எனும் மக்களுக்கான மாபெரும் ஐடியாலஜியை நீங்கள் பேசப் போகிறீர்கள்.
திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்கின்ற தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக-தமிழின் உயர்வுக்காக - போராடுகின்ற மாபெரும் வரலாற்று கடமை வந்திருக்கிறது! இந்தியாவிலேயே இன்றைக்கு தமிழ்நாடு தனித் தன்மையோடு இருக்கிறது. அந்த லெகசியின் தொடர்ச்சியாக நீங்கள் வரப் போகிறீர்கள் என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
சென்னையில் அறிவுத்திருவிழா நடந்தபோது, என்னடா தலைநகரில் மட்டும், இப்படி நிகழ்ச்சி நடத்துகிறார்களே, மற்ற பகுதிகளில் நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் உதயநிதி இந்த வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்து,
வடக்கு மண்டலத்தில் இருக்கின்ற 29 கழக மாவட்டங்கள் - 91 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து, கிளை - வார்டு - பாக அளவில் நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய 1 லட்சத்து 30,000 இளைஞர்கள் வருகிறார்கள் என்று சொன்னதும், வார்டு, கிராம அளவில் இந்த அறிவுத் திருவிழா நடைபெறப் போகிறது என்று மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஞாயிறு அன்று சந்திப்போம். New Dravidian Stars! You are Welcome. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசியுள்ளார்.
* திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்கின்ற தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக-தமிழின் உயர்வுக்காக - போராடுகின்ற மாபெரும் வரலாற்று கடமை வந்திருக்கிறது!