திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கணினி ஹேக்: போலீசில் புகார்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்தக் கோயிலில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதற்கு பின்னர் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன், கேமரா உள்பட எந்த மின்னணு பொருட்களையும் கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பத்மநாபசாமி கோயிலில் நிர்வாக ரீதியிலான அனைத்துப் பணிகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
வரவு, செலவு கணக்குகள் மற்றும் இந்தக் கோயில் குறித்த எல்லா விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயிலின் கணினி ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் செயல்பட்டது யார், என்னென்ன விவரங்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரிக்கின்றனர்.