திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா விருது கமிட்டி பெண் உறுப்பினரை ஓட்டலில் பலாத்காரம் செய்ய முயற்சி: பிரபல இயக்குனர் மீது பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா வரும் 12ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. ஜப்பான், கொரியா, சீனா, வியட்நாம் உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. திரைப்பட விழாவுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் திரையிட வேண்டிய படங்கள் குறித்து ஆலோசனை நடத்த திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு ஒரு விருதுக் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினரான ஒரு பெண் திரைப்பட கலைஞரை திரைப்பட விழா கமிட்டி தலைவரான மலையாள இயக்குனர் அழைத்துள்ளார். இதன்படி நேற்று அவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அறையில் வேறு யாரும் இல்லை. திடீரென அந்த இயக்குனர், பெண் சினிமா கலைஞரை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.