திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் தீ: பெட்டியில் இருந்து குதித்த பயணிகள்
அரக்கோணம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே நேற்று காலை 8:26 மணிக்கு ரயில் வந்தது. அப்போது, ஏசி பெட்டியின் கீழ் பகுதியில் தீப்பொறியுடன், அதிகளவு புகை கிளம்பியது. இதனை பார்த்த மேல்பாக்கம் பகுதியில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திடீரென ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் ஏசி பெட்டியில் இருந்து புகை, தீப்பொறி கிளம்பி அங்கு புகை மண்டலமாக காணபட்டது. இதை அறிந்த பயணிகள், அதிர்ச்சிக்குள்ளாகி அலறியடித்தபடியே ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தீயணைப்பு கருவியுடன் வந்து, ஏசி பெட்டியின் அடியில் ஏற்பட்ட தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இதையடுத்து அரை மணி நேர தாமதத்திற்கு பின் காலை 9 மணியளவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ உடனே கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்துகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.