திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு பூவை ஜெகன் மூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
இதுதொடர்பாக முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை, கடந்த ஜூன் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, சிறையில் உள்ள விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா உள்ளிட்ட 5 பேர், ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்த நிலையில் பூஜை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் முன்பு பூவை ஜெகன்மூர்த்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த, விசாரணையின்போது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை பூஜை ஜெகன்மூர்த்தி மறுத்ததாக கூறப்படுகிறது.