திருவள்ளூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் புகையிலை பொருள் விற்றதாக 417 கடைகளுக்கு சீல்; ரூ.1.17 கோடி அபராதம்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அடங்கிய குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சில்லறை வணிகங்கள், பெட்டி கடைகள், குடோன்கள், பார்சல் புக்கிங் ஆபீஸ், டிரான்ஸ் போர்ட் மற்றும் பள்ளிகள் சுற்றியுள்ள பகுதிகளில் 2452 கடைகளில் சோதனை நடத்தினர். இதில், 1314.819 கிலோ கிராம் எடை கொண்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 89 ஆயிரத்து 124 ஆகும். இதில், 52 கடைகளுக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 52 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுபோல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அடங்கிய குழுக்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். 14 ஆயிரத்து 829 கடைகளில் நடத்திய சோதனையில் 1999.325 கிலோ கிராம் புகையிலை பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சத்து 1779. இதில், 426 கடைகளுக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 417 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் மாவட்ட முழுவதும் 17,281 கடைகளில் நடத்திய சோதனையில் 478 கடைகளில் ரூ.19 லட்சத்து 90 ஆயிரத்து 903 மதிப்புள்ள 3314.144 கிலோ கிராம் புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 417 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தெரிவித்துள்ளார்.