திருவள்ளூரில் 2 நாட்களாக இடைவிடாது தொடர்மழை: குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி
திருவள்ளூர்: வங்கக் கடலில் மோன்தா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் சுமார் 50 குடியிருப்புகளில் வாழும் மக்கள் இதனால் அவதியடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக பருவமழை காலங்களில் இந்த தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அதேபோல இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்ப காலத்திலேயே மழை வெளுத்துவாங்கிவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூரில் பட்டரைபெரும்புதூர் பகுதியில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. வீதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை அடுத்து நிரந்தரமாக கால்வாய் அமைத்து மழைநீர் தேங்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.