திருவாலங்காடு ஒன்றியத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் காத்திருப்பு
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் பூனிமாங்காடு, நெமிலி, பனப்பாக்கம், கூளூர், பாகசாலை, களாம்பாக்கம், பெரிய களக்காட்டூர், தோமூர் பகுதிகளில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நெமிலி, பூனிமாங்காடு நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 3 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். இதனால் அறுவடை செய்து டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளுடன் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், நேரடி நெல் கொள்முதல் கிடங்குக்கு லாரிகளில் நெல்மூட்டைகளை ஏற்றிச் செல்லும் உரிமம் பெற்றுள்ள நபர், குறிப்பிட்ட நேரத்தில் லாரிகளை அனுப்பாமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் ஏராளமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்க இடமின்றி, டிராக்டர்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெமிலி, பூனிமாங்காடு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் அதிகளவு நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதால், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 3 நாட்களாக டிராக்டர்களில் நெல்மூட்டைகளுடன் காத்திருப்பதாகவும், நாளொன்றுக்கு டிராக்டர் வாடகையாக 1000 ரூபாய் வழங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, மேற்கண்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகளில் ஏற்றி செல்லப்படுவதையும், இங்கு முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.