திருவாலங்காட்டில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கரும்பு லாரிகளால் விபத்து அபாயம்
திருத்தணி: திருவாலங்காட்டில் மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கரும்பு லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருத்தணி அருகே திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள், கரும்புகளை அறுவடை செய்து, லாரி மற்றும் டிராக்டர்களில் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கரும்பாலைக்கு செல்லும் அனைத்து லாரி மற்றும் டிராக்டர்களும் திருவாலங்காட்டில் இருந்து சின்னம்மாபேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை மற்றும் ஜங்ஷன் பகுதியின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து, நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் லாரிகள் நிற்பதுகூட தெரிவதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கரும்பு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் லாரிகளை நிறுத்த இட வசதி உள்ளது. அப்படி இருந்தும் சாலையிலேயே நிறுத்துகின்றனர். எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையோரத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.