திருவாடானை வட்டாரத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நிலத்தை உழுது தயார் செய்த விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன் நேரடி நெல் விதைப்பு செய்தனர். அதன்பின் ஒரு மாதமாக மழை இல்லாததால், விதைத்த நெல் வீணாகும் நிலை ஏற்பட்டது. பல கிராமங்களில் விவசாயிகள் மறு விதைப்பும் செய்தனர்.
இதனிடையே, அவ்வப்போது பெய்த மழையால், நெற்பயிர் முளைத்து வந்தன. இந்நிலையில், தற்போது ஒரு வார காலமாக திருவாடானை வட்டாரத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால், இளம் பயிர்கள் அழுகும் என கவலை தெரிவிக்கின்றனர். வயலில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், நெற்பயிர்களை காக்கவும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.