திருப்புவனத்தில் மழைக்கு ஏடிஎம் மையத்தில் மாடு தஞ்சம்: சமூக வலைதளங்களில் வைரல்
திருப்புவனம்: திருப்புவனத்தில் கொட்டும் மழையில் தப்பிக்க மாடு ஒன்று ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சமடைந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கினர். சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. அதேநேரம், தெருக்களில் கும்பல் கும்பலாக சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகள் மழையில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகள், கூரைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், திருப்புவனம் மெயின்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.
இன்று அதிகாலை மாடு ஒன்று மழைக்கு ஒதுங்க இடமின்றி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்துவிட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏடிஎம் மையத்தை ஆக்கிரமித்துக்கொண்ட மாடு அங்கிருந்து நகரவில்லை. அதிகாலை நேரம் என்பதால் ஏடிஎம் மையத்திற்கு ஆட்கள் வராத நிலையில் மாட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர், மழை ஓய்ந்ததால் ஏடிஎம் மையத்தில் இருந்து ஒருவழியாக மாடு வெளியேறியது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.