திருப்பரங்குன்றம் மலை விவகாரம் 3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், 3வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார். இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சிலர் தரப்பில், ‘‘2,500 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்படுகிறது. இஸ்லாம் 700 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ்நாட்டிற்கு வந்தது. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா 13 அல்லது 14ம் நூற்றாண்டுகளில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் மலை குறித்து கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடும் வழக்கம் இல்லை. ஆடு, கோழி பலியிடுவது கட்டாயமான, தேவையான பழக்கவழக்கம் இல்லை. இந்த பழக்கவழக்கம் இருந்ததை நிரூபிக்க வேண்டும்’’ எனக் கூறி, இது தொடர்பான உரிமையியல் நீதிமன்றம் மற்றும் பிரிவியூ கவுன்சில் உத்தரவுகளை வழங்கினர். மற்றவர்கள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் சமண கல்வெட்டுக்கள் உள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளது. தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும். ஆடு, கோழி பலியிடலாமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது உரிய தீர்ப்பளிக்கப்படும் எனக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.