திருநின்றவூர் அருகே மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
ஆவடி: திருநின்றவூர் அருகே மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அமைச்சர் நாசர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.வடகிழக்கு பருவ மழையால் நத்தமேடு, பாக்கம் ஏரிகள் முழுவதுமாக நிரம்பியது. இதனால் ஏரி கரையோரம் உள்ள குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. இங்குள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் குடியிருப்பு, நத்தம்பேடு மேற்கு, ஷாமேன்ஷா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி ச.மு.நாசர், எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கலெக்டர் மு.பிரதாப் ஆகியோர், மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், 34 குடும்பங்களுக்கு காலை சிற்றுண்டி, பால், ரொட்டி, மளிகை பொருட்கள், குடை, போர்வை, பாய், தலகாணி ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினர்.
அப்போது, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கூறியது, மழைபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். நத்தமேடு பகுதியில் ஏரி நிரம்பி உபரிநீர் வீடுகளை சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களை பாதுக்காப்பாக நிவாரண முகாமில் தங்கவைத்து உடை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துகொடுத்துள்ளோம். மேலும் பட்டா இல்லாதவர்கள், ஏரி பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்றிடம் வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஆய்வு செய்து, முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவடி கன்னியம்மன்நகரில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் இவர்களுக்கும் மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.