திருமாவளவன் கார் பைக் மீது மோதிய விவகாரம் உள்துறை செயலர், டிஜிபி நவ.25க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு
சென்னை: சென்னை, உயர் நீதிமன்றம் அருகே சில நாட்களுக்கு முன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வக்கீல் தட்டிக்கேட்ட போது வக்கீலுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வக்கீல் தாக்கப்பட்டார். திருமாவளவனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக கட்சியினர் கூறினர்.
மேலும் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி திருமாவளவன் குற்றம் சாட்டினார். இந்த சதிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ், பாஜவினர் உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ஆதனூர் பாவேந்தர் நகரை சேர்ந்த வக்கீல் நெப்போலியன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் விசிக தலைவர் திருமாவளவன் மீது சாதிய வன்மத்தோடு திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்கொலை படை தாக்குதல் போன்று இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
எனவே திருமாவளவனுக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.