திருமங்கலம் காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவில் வழக்குபதிவு
அண்ணாநகர்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடந்தாண்டு நவம்பர் 17ம்தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; சட்டங்கள், திட்டங்களை நிறைவேற்றும் சட்டமன்றம், பாராளுமன்றம் இருக்கும்போது எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் சொல்லிவிட்டது, நீதிமன்ற உத்தரவு என்று சொன்னால் எப்படி? சட்டமன்றமும் பாராளுமன்றமும் பல்லாங்குழி விளையாடவா இருக்கிறது.இவ்வாறு கூறினார்.
சீமானின் இந்த பேச்சு தொடர்பாக திருமங்கலம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பின்னர் இரண்டு குழுக்கள் அல்லது பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் பேச்சு, பொது நன்மைக்கு தீமையை வழிவகுக்கும் அறிக்கை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.