திருமணஞ்சேரி-மஞ்சுவிடுதி சாலை சீரமைக்க வேண்டும்
*கிராம மக்கள் கோரிக்கை
கறம்பக்குடி : திருமணஞ்சேரியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்கள் அமைந்துள்ள ஊரான திருமணஞ்சேரிக்கு தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக எந்த நேரமும் கூட்ட நெரிசில் காணப்படுகிறது. திருமணஞ்சேரி, மஞ்சு விடுதி கிராமத்திலிருந்து முதல் கரை தெருவிற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக கிராம பொதுமக்கள் அந்த சாலையில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்துள்ளனர்.
எனவே, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், திருமணஞ்சேரி ஊராட்சி மஞ்சு விடுதி முதல் கரை தெரு மக்களின் நலன் கருதி உடனடியாக பழுதடைந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென மஞ்சு விடுதி திருமணஞ்சேரி முதல் கரை தெரு பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.