திருக்குறுங்குடி அருகே குழாய் இணைப்பு துண்டிப்பு இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
*பொதுமக்கள் பாதிப்பு
*அதிகாரிகள் பாராமுகம்
களக்காடு : திருக்குறுங்குடி அருகேயுள்ள இரண்டு கிராமங்களுக்கு, குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்குறுங்குடி பேரூராட்சி மற்றும் புலியூர்குறிச்சி கிராம பஞ்சாயத்தை உள்ளடக்கியது கீழக்கட்டளை கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக புலியூர்குறிச்சி பஞ்சாயத்து சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்க் மூலம் தெருக்களில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீரை திருக்குறுங்குடி, புலியூர்குறிச்சி பஞ்சாயத்தின் கீழ் அமைந்துள்ள கீழக்கட்டளை, கரைக்குடியிருப்பு மற்றும் வடக்கு ஆவரந்தலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருக்குறுங்குடி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கட்டளை, வடக்கு ஆவரந்தலை பகுதிகளுக்கு மட்டும் திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிக்க தண்ணீரின்றி அவதியடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் டேங்க் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்த போது, புலியூர்குறிச்சி பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்க் மூலம் திருக்குறுங்குடி டவுன்.பஞ்.,கீழ் உள்ள கீழக்கட்டளை மற்றும் வடக்கு ஆவரந்தலை பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தை மட்டும் நிறுத்தியிருப்பது தெரிய வந்தது.
அதாவது புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் இருந்து திருக்குறுங்குடி டவுன். பஞ்., பகுதிகளுக்கு கீழ் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் சீராக செய்ய முடியவில்லை என்பதால் புலியூர்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் உத்தரவின் பேரில் திருக்குறுங்குடி டவுன். பஞ்சாயத்துக்கு கீழுள்ள கீழக்கட்டளை மற்றும் வடக்கு ஆவரந்தலை பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்ணீர் டேங்க் முன்பு திரண்டனர். இது குறித்து பொதுமக்கள் திருக்குறுங்குடி டவுன்.பஞ்.,சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊழியர்களை கொண்டு குடிநீர் விநியோகத்திற்கான உரிய நடவடிக்கையை எடுத்தனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையால் மீண்டும் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருக்குறுங்குடி டவுன். பஞ்.,க்குட்பட்ட 2 கிராமங்களுக்கு மீண்டும் சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.