திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர தேர் திருவிழா
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்ட வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகும்.
இங்குள்ள மலைக்குன்றுகளை 4 வேதங்களாக கொண்டு, இதில் அதர்வன மலைக்குன்றின்மீது வேதகிரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இம்மலையடிவாரத்துக்கு சற்று தள்ளி தாழக்கோவிலில் பக்தவசலேஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள திரிபுரசுந்தரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்களும் ஆடிப்பூர விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இக்கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் ஆடிப்பூர விழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வந்தன.
நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இங்கு ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் திரிபுரசுந்தரியம்மன் மலர் அலங்காரங்களுடன் அமர்த்தப்பட்டு, 4 மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.