திருச்செந்தூர் கோயிலில் 13 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் வீதி உலா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக கிரி பிரகாரத்தில் தரைத்தள பணிகளுக்காக கடந்த 17.07.2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று முதல் மீண்டும் தங்க தேர் உலா தொடங்கியது.
நேற்று மாலை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்க தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதற்கிடையே கடந்த மாதம் கோயில் உண்டியலில் 2 கோடியே 48 லட்சத்து 94 ஆயிரத்து 901 ரூபாயும், தங்கம் 1 கிலோ 102 கிராம், வெள்ளி 14.1 கிலோவும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.