திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கி காணப்படும் கடல்: பாதுகாப்பாக நீராட பணியாளர்கள், போலீசார் அறிவுறுத்தல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் முன்புள்ள கடல் பகுதி 2-வது நாளாக 70அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. எனினும் பக்தர்கள் அச்சமின்றி நீராடி வருகின்றனர். முருகன் கோயிலின் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கி சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படும்.
இதற்கிடையே அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. செந்தூர் பகுதிகளில் இருந்து அய்யா பகுதில் வரையிலும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கரையில் இருந்து 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கி காணப்படுவதால் பச்சைநிறம் பாசி படிந்த பாறைகள் அதிகமாக வெளியில் தெரிகிறது.
அதன்மேல் பக்தர்கள் நின்று புகை படம் மற்றும் செல்ஃபி எடுத்து ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் சிலர் கடல் உள்வாங்கி காணப்படும் பகுதியில் அந்த 70 அடி தாண்டி கடலுக்கு சென்று நீராடி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் கரையில் நிற்கும் மக்களை கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் அதிகமாக ஆழத்தில் நீராட கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.