திரு.வி.க.நகர் பகுதியில் ரூ.28.54 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை: அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி. கே. சேகர்பாபு, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.28.54 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வார்டு-69, முத்துகுமாரப்பா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சமுதாய நலக் கூடமானது, தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 40,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 35 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள், 50 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்தும் இடம், இரண்டாம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண நிகழ்வு கூடம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான ஓய்வறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணி,
ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளிக் கட்டடப் பணி மற்றும் மேயர் முனுசாமி விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவில் உள்ள கால்பந்து மற்றும் இறகுபந்து மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணி, வார்டு-70க்குட்பட்ட கபிலர் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளிக் கட்டடப் பணி ஆகியவற்றினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மேயர் பிரியா, துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.