திருடர்கள், கொள்ளையர்களுக்கு பயந்து லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு கிடைத்ததும் தொழிலாளி குடும்பத்துடன் தலைமறைவு: பாதுகாப்பு அளித்து மீட்ட போலீசார்
பரீத்கோட்: பஞ்சாப்பில் 1.5 கோடி ரூபாய் லாட்டரி விழுந்தும், கொள்ளையர்களுக்குப் பயந்து குடும்பத்துடன் தலைமறைவான கூலித் தொழிலாளியைப் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் மாவட்டம் சைதேகே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம் சிங்குக்கு மனைவி நசீப் கவுர் மற்றும் மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ராம் சிங் வழக்கமாக விலை குறைவான லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். ஆனால், ராஜு என்ற லாட்டரி முகவர் கொடுத்த ஆலோசனையின் பேரில், தனது மனைவி பெயரில் 200 ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.
கடந்த 6ம் தேதி வெளியான முடிவில், அந்தச் சீட்டிற்கு முதல் பரிசான 1.5 கோடி ரூபாய் விழுந்தது. அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டியபோதும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் வறுமையில் வாடிய அந்தக் குடும்பம் அச்சத்தில் உறைந்தது. இந்நிலையில், லாட்டரி விழுந்த செய்தி ஊர் முழுவதும் பரவியதால், பணம் பறிக்கும் கும்பல் அல்லது திருடர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று ராம் சிங் குடும்பத்தினர் கடும் பீதியடைந்தனர். இதனால், வீட்டைப் பூட்டிவிட்டு செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்திற்குச் சென்று குடும்பத்துடன் தலைமறைவாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த பரீத்கோட் போலீசார் அவர்களைத் தேடிப் பிடித்துக் கண்டுபிடித்தனர். அவர்களிடம் பேசிய போலீசார், ‘எதற்கும் பயப்பட வேண்டாம்; உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்; சந்தேகப்படும்படி யாராவது பேசினால் உடனே தகவல் தெரிவியுங்கள்’ என்று தைரியம் கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர். தற்போது லாட்டரித் தொகையைப் பெறுவதற்காக அவர்கள் சண்டிகர் சென்றுள்ளனர். இந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்டவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பயன்படுத்தப்போவதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.